×

குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவினை மேம்படுத்த நடவடிக்கை: அமைச்சர் மதிவேந்தன் தகவல்

சேலம்: குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவினை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என  அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார். வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் சேலம் மாவட்டம், குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவில் இன்று (27.12.2022) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டில் உள்ள வனப்பரப்பினை அடுத்த 10 ஆண்டுகளில் 33 விழுக்காடாக உயர்த்த வேண்டும் என்ற அடிப்படையில் பசுமை தமிழ்நாடு என்ற திட்டத்தைத் தொடங்கி செயல்படுத்தி வருகிறார்கள்.

இதனைத்தொடர்ந்து, தமிழகத்தில் வனப்பரப்பினை அதிகரித்திடும் வகையில் பல்வேறு பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள 3 உயிரியில் பூங்காக்களில் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவும் ஒன்று. 31 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இப்பூங்காவில் 24 வகையிலான 200-க்கும் மேற்பட்ட பல்வேறு பறவைகள் மற்றும் விலங்கினங்கள் உள்ளன. சேலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் பொழுதுபோக்குத் தளங்களில் ஒன்றாக குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா இருக்கிறது. இப்பூங்காவை மேம்படுத்தும் விதமாக ரூபாய் 8 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இன்றைய தினம் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவினை மேம்படுத்திட மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், சிறு பூங்காவாக உள்ள இப்பூங்காவினை நடுத்தர பூங்காவாக உயர்த்துவது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. வனத்துறையின் சார்பில் இயற்கையைப் பாதுகாப்பதற்கு முக்கியத்துவம் அளித்து சுற்றுலாவை மேம்படுத்திடும் வகையில் சூழலியல் சுற்றுலா தொடர்பான ஆய்வுக்கூட்டங்களும் விரைவில் நடத்தப்படவுள்ளன இவ்வாறு தெரிவித்தார்.

முன்னதாக, பசுமைத் தமிழ்நாடு இயக்கத்தின் சார்பில் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்கள். இதனைத்தொடர்ந்து, அஸ்தம்பட்டியில் உள்ள சந்தன மரக்கிடங்கினை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் செ. கார்மேகம், சேலம் மாநகராட்சி மேயர் ஆ. இராமச்சந்திரன், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) சீ. பாலச்சந்தர், சேலம் மண்டல வனப் பாதுகாவலர் அ. பெரியசாமி,

சேலம் சரக வன அலுவலர் (பொ) இராஜாங்கம், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.பெ.மேனகா, சேலம் வருவாய் கோட்டாட்சியர் சி.விஷ்ணுவர்த்தினி, முன்னாள் அமைச்சர் டி.எம். செல்வகணபதி, முன்னாள் சட்டமன்ற  உறுப்பினர் எஸ்.ஆர்.சிவலிங்கம் உட்படதொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags : Kurumbapatti Forest Zoo ,Minister ,Madhivendan , Steps to improve Kurumbapatti Forest Zoo: Minister Mathiventhan informs
× RELATED சட்டவிரோத பண பரிவர்த்தனை ஜார்க்கண்ட்...